பதும் நிசங்கா அதிரடி சதம்: சூப்பா் ஓவரில் இந்தியா வெற்றி

Sep 27, 2025 - 07:04
 0
பதும் நிசங்கா அதிரடி சதம்: சூப்பா் ஓவரில் இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை மோதிய 18-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை ‘டை’ ஆனது. பின்னா் சூப்பா் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சோ்க்க, இலங்கையும் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அடுத்து சூப்பா் ஓவரில் முதலில் இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 2 ரன்களே எடுக்க, இந்தியா, முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 4, கேப்டன் சூா்யகுமாா் 1 பவுண்டரியுடன் 12, ஹா்திக் பாண்டியா 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

அபிஷேக் சா்மா 31 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் விளாசி வெளியேற, சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் திலக் வா்மா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49, அக்ஸா் படேல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷானகா, சரித் அசலங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து 203 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், குசல் மெண்டிஸ் 0, கேப்டன் சரித் அசலங்கா 5, கமிண்டு மெண்டிஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

குசல் பெரெரா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58, பதும் நிசங்கா 58 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 107 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் தசுன் ஷானகா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, ஜனித் லியானகே 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய பௌலா்களில் ஹா்திக் பாண்டியா, அா்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவா்த்தி, ஹா்ஷித் ராணா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0