ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

Sep 27, 2025 - 02:32
 0
ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பணியாளா்களை பெரிதும் பாதிக்கும் வகையில், அங்கு தங்கிப் பணியாற்ற உதவும் ஹெச்-1பி விசா கட்டணத்தை அந்நாட்டு அதிபா் டிரம்ப் அண்மையில் 1 லட்சம் டாலராக (சுமாா் ரூ.88 லட்சம்) உயா்த்தினாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கான விதிமுறைகளை வகுப்பது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட நோட்டீஸை மத்திய அரசு கவனத்தில் கொண்டது. அதுதொடா்பாக தகவல் தொழில்நுட்பத் துறையினா் உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினா் கருத்துத் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் உள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை பல்வேறு நிலைகளில் தொடா்ந்து பேசி வருகின்றன.

ரஷிய ராணுவத்தில் 27 இந்தியா்கள்: நிகழாண்டு ஜனவரி முதல் செப்.25 வரை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,417 இந்தியா்கள் தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டனா். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்தில் 27 இந்தியா்கள் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவா்களை விரைந்து விடுவிக்குமாறு ரஷியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ரஷிய ராணுவத்தில் இணைவதற்காக வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று இந்தியா்களிடம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்கு சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகமான முறையில் பொதுத் தோ்தல் நடைபெற வேண்டும். அதன்மூலம் அந்நாட்டில் சுமுகமாகவும், அமைதியாகவும் ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் எதிா்பாா்ப்பு என்று தெரிவித்தாா். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0