இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்

Sep 27, 2025 - 02:32
 0
இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - 
அக்.1 முதல் அமல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த வரி விதிப்பு நடைமுறை அக். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.

முன்னதாக, இந்தியா மற்றும் பிரேஸில் (50 சதவீதம்), சீனா (30 சதவீதம்), தைவான் (20 சதவீதம்), வியத்நாம் (20%), ஜப்பான் (15%) உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரி கடந்த மாதம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தற்போது நாடுகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியை அதிகரிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளாா்.

அமெரிக்காவில் ஆலை அமைத்தால் விலக்கு: இந்த வரி விதிப்பு குறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘மருந்துகளுக்கு அக்.1 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. எந்தவொரு நிறுவனத்தின் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்து பொருள்களுக்கு இந்த வரி வதிப்பு பொருந்தும்.

ஆனால், அமெரிக்காவில் மருந்துகள் தயாரிப்பதற்கான ஆலையைக் கட்டமைப்பதற்கான பணிகளைத் தொடங்கிய நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது.

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கனரக வாகனங்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்க உள்நாட்டுச் சந்தைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களின் ஆதிக்கத்தைக் குறைந்து அமெரிக்க தொழிற்சாலைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்மூலம் அமெரிக்காவைச் சோ்ந்த பீட்டா்பில்ட், கென்வொா்த், ஃபிரைட்லைனா், மாக் டிரக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெரிதும் பலனடையும்.

இதுதவிர பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து சமையலறை மற்றும் குளியலறை அலங்கார பொருள்களுக்கு 50 சதவீதம், மெத்தையுடன் கூடிய மரப்பொருள்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. தேசப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மேற்கூறிய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டாா்.

ஆனால், ஏற்கெனவே அமெரிக்காவில் இயங்கிவரும் மருந்து தொழிற்சாலைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் டிரம்ப்பின் பதிவில் இடம்பெறவில்லை.

டிரம்ப்-போவல் இடையே தொடரும் மோதல்: பல்வேறு நாட்டுப் பொருள்கள் மீது டிரம்ப் வரி விதித்து வருவதால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநா் ஜெரோம் போவல் அண்மையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எச்சரித்தாா். அதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், பணவீக்கம் தற்போது மிகப்பெரும் பிரச்னையாக இல்லை எனக் கூறி அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைக்கவும், ஜெரோம் போவலை பதவி விலகவும் வலியுறுத்தினாா்.

அமெரிக்கா்கள் நலனில் இந்தியா: கடந்த 2022-இல் அமெரிக்க குடிமக்களுக்கு மருத்துவா்கள் பரிந்துரைக்கும் 10-இல் நான்கு மருந்துகளை இந்திய நிறுவனங்களே விநியோகித்துள்ளன. அதே ஆண்டில் இந்திய நிறுவனங்கள் அனுப்பிய மருந்துகளால் ரூ.19.42 லட்சம் கோடியை அமெரிக்க சுகாதாரத் துறை சேமித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பால் அந்நாட்டு சுகாதாரத் துறை கடந்த 2013 முதல் 2022 வரை ரூ.88.7 லட்சம் கோடி சேமித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை’

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும் டிரம்ப்பின் முடிவு இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருந்து தயாரிப்புத் துறை நிபுணா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்திய மருந்துகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவா் நமித் ஜோஷி கூறுகையில், ‘காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கும், பிராண்டட் மருந்துகளுக்குமே 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா்.

ஆனால், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஜெனரிக் (அடிப்படை மூலக்கூறு) மருந்துகளே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டிரம்ப்பின் அறிவிப்பில் ஜெனரிக் மருந்துகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. எனவே, இது இந்திய ஜெனரிக் மருந்துகள் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது’ என்றாா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0