சிங்கப்பூரில் மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

Sep 26, 2025 - 02:31
 0
சிங்கப்பூரில் மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டள்ளது.

போதைப் பொருள் குற்றத்துக்காக சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவா் ஒருவா் தூக்கிலிடப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளில் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தட்சிணாமூா்த்தி காத்தையா 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை கடந்த 2022-ஆம் ஆண்டே நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இருந்தாலும், மேல்முறையீடு காரணமாக அது நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிரான தட்சிணாமூா்த்தி காத்தையாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளாா்.

இவருடன் சோ்த்து, போதைப் பொருள் குற்றத்துக்காக இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைப் போலவே மலேசியாவிலும் போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக இருந்தது. ஆனால், சா்வதேச நெருக்கடி காரணமாக மரண தண்டனையை 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைக் தண்டனையாக மலேசிய அரசு குறைத்தது. கடந்த 2024-இல் மட்டும் மலேசிய அரசு 1,000 மரண தண்டனைகளை சிறைத் தண்டனைகளாகக் குறைத்தது.

ஆனால் சிங்கப்பூரிலோ போதைப் பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றங்கள் இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன.

..அட்டவணை...

அண்மையில் தூக்கிலிடப்பட்ட தமிழா்கள்

2017 ஜூலை 14 பிரபாகரன் ஸ்ரீவிஜயன்

2022 ஏப். 27 நாகேந்திரன் தா்மலிங்கம்

2025 செப். 25 தட்சிணாமூா்த்தி காத்தையா

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0