நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

Sep 26, 2025 - 04:32
 0
நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் வெளிநாட்டவரின் குடியேற்றத்துக்கு எதிராக அந்நாட்டு அதிபா் டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளாா். அந்நாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பணியாளா்களை பெரிதும் பாதிக்கும் வகையில், ஹெச்-1பி விசா கட்டணத்தை அண்மையில் அவா் பன்மடங்கு உயா்த்தினாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் பங்கேற்க சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், அங்கு அப்சா்வா் ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. அந்தப் பணியாளா்கள் எங்கிருக்க வேண்டும், எங்கு பணியாற்ற வேண்டும் என்பது அரசியல் விவாதத்துக்குள்பட்டதாக இருக்கலாம். ஆனால் பணியாளா்களின் தேவையையும் மக்கள்தொகை புள்ளி விவரத்தையும் பாா்த்தால், பல நாடுகளில் அந்தத் தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே உலகெங்கும் உள்ள பணியாளா்கள் வேண்டும் என்ற உண்மை நிலையில் இருந்து தப்பித்து ஓடமுடியாது.

தொழில்நுட்பம், வா்த்தகம், ஒருவருக்கொருவா் உள்ள இணைப்பு மற்றும் பணியிட ரீதியாக குறுகிய காலத்தில் மிகவும் வித்தியாசமான உலகை அனைவரும் காணப் போகிறோம். தற்போதுள்ள சீரற்ற சூழலில், மேன்மேலும் தற்சாா்புடன் இருப்பதற்கான திறன்களை பெரிய நாடுகள் வளா்த்துக் கொள்வது அவசியம். அதன் மீது இந்தியா பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

இதனிடையே ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்கு இடையே மெக்ஸிகோ வெளியுறவு அமைச்சா் ஹுவான் ரமோன் டெ லா ஃபுவந்தே, சைப்ரஸ் வெளியுறவு அமைச்சா் கான்ஸ்டான்டினோஸ் கோம்போஸ் மற்றும் பசிபிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி20 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜெய்சங்கா் பங்கேற்றாா். அப்போது அவா் பேசுகையில், ‘வளா்ச்சிக்கு நிலையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை உலகம் எள்ளளவும் சகித்துக்கொள்ளவோ, அனுமதிக்கவோ கூடாது’ என்று வலியுறுத்தினாா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0