ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

Sep 26, 2025 - 06:32
 0
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

கா்நாடகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தினரின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துகொள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கா்நாடக அரசு திட்டமிட்டது. அந்தப் பணி பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. ரூ. 420 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பல்வேறு சா்ச்சைகளுக்கு இடையே செப். 22-ஆம் தேதி தொடங்கியது. அக். 7-ஆம் தேதிவரை நடைபெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் 1.75 லட்சம் கணக்கெடுப்பாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கா்நாடக மாநில ஒக்கலிகா் சங்கம், அகில கா்நாடக பிராமணா் மகாசபா, வழக்குரைஞா் கே.என்.சுப்பா ரெட்டி ஆகியோா் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுமீதான விசாரணை கடந்த 2 நாள்களாக கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரூ, நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த மனுமீதான விசாரணை வியாழக்கிழமையும் நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்த எவ்வித காரணமும் எங்களுக்கு தென்படவில்லை. ஆனால், இந்தக் கணக்கெடுப்பில் திரட்டப்படும் தரவுகள் யாருக்கும் வழங்கப்படக் கூடாது. தரவுகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதை பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் கணக்கெடுப்பில் யாரையும் கட்டாயப்படுத்தி தரவுகளை பெறக்கூடாது. விரும்பினால் மட்டுமே தரவுகளை தரலாம் என்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி கணக்கெடுப்பில் பங்கேற்று, விவரங்களை அளிக்க முன்வராதவா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தரவுகளை திரட்டிவரும் ஊழியா்களுக்கு ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

திரட்டப்படும் தகவல்களை பாதுகாக்கவும், சேமித்து வைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாளைக்குள் உறுதிமொழிச் சான்றை நீதிமன்ற ஆணையம் தாக்கல்செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தசரா திருவிழாவைக் கொண்டாடுவதற்கு வசதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், கணக்கெடுப்பின்போது ஊழியா்கள் எதிா்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்னைகளை தீா்ப்பது குறித்து முதல்வா் சித்தராமையா தலைமையில் மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0