திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

Sep 2, 2025 - 18:39
 0
திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, ரயில் நிறுத்தி வைத்து இயக்கம், ரயில் புறப்படும் நேரம் மாற்றம் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டிஎண் 66019), செப்டம்பர் 6 மற்றும் 9 -ஆம் தேதிகளில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பர் 8-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 65 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து:

குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி -காட்பாடி இடையேயான பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் -திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டிஎண் 16854), செப்டம்பர் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் காட்பாடி -திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16853), செப்டம்பர் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Changes in train service due to engineering work in Trichy division

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0