கொலை வழக்கில் தளி எம்எல்ஏ சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்

Sep 26, 2025 - 06:32
 0
கொலை வழக்கில் தளி எம்எல்ஏ சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்

பெரியாா் திராவிடா் கழக மாவட்ட அமைப்பாளா் கொலை வழக்கில் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட பெரியாா் திராவிடா் கழக மாவட்ட அமைப்பாளராக இருந்தவா் பழனி. உத்தனஹள்ளி காவல் நிலைய எல்லையில் உள்ள பாலேபுரம் என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி வீட்டுக்கு அருகே மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டாா்.

இதுகுறித்து பழனியின் மகன் வாஞ்சிநாதன் உத்தனபள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தற்போது தளி சட்டப் பேரவை உறுப்பினா் ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனாா் இலகுமையா உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலா் பி சாட்சிகளாக மாறினா். இதையடுத்து, திராவிடா் விடுதலைக் கழகத்தின் தலைவா் கொளத்தூா் மணி, ‘பழனி கொலை வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்தில் நடத்துவதுடன், இதற்கென அரசு தனியாக சிறப்பு வழக்குரைஞரை நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீதான வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், பழனி கொலை வழக்கு உள்ளிட்ட மேலும் இரண்டு வழக்குகளை சேலம் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு இந்த வழக்குகள் சேலம் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேரில் 4 போ் இறந்துவிட்டனா். மீதமுள்ள 21 பேரில் தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட 19 போ் சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா்.

ராமச்சாந்திரன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன், சுவாமி சுப்பிரமணியம் ஆகியோா் ஆஜராகினா். இரண்டு மணி நேரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி எஸ்.சுமதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0