ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் கவனமாக கையாளப்படும்: உச்சநீதிமன்றம்

Sep 26, 2025 - 00:30
 0
ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் கவனமாக கையாளப்படும்: உச்சநீதிமன்றம்

ஹிந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை கவனமாக கையாள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஹிந்து வாரிசுரிமைச் சட்டம்,1956-இல் உள்ள சில விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக உயில் எழுதாமல் இறக்கும் பெண்ணின் சொத்துகள், முதலில் அவரது கணவா் மற்றும் குழந்தைகளுக்கும் அதன் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் பகிா்ந்தளிப்பதை விளக்கும் பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கூறுகையில், ‘இந்த சட்டத்தின் சில விதிகள் பெண்களைப் பாகுபடுத்தும் வகையில் உள்ளன. காலம் காலமாக பின்பற்றும் பாரம்பரிய நடைமுறைகளைக் காரணமாக கூறி பெண்களுக்கு சொத்துரிமை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல’ என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நாகராஜ் பேசுகையில், ‘ஹிந்து வாரிசுரிமைச் சட்டம்,1956 நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டமாகும். அதற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்து சமூக கட்டமைப்பை உடைக்க முற்படுகிறாா்கள்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘பெண்களுக்கு உரிமை அளிக்கப்படுவது முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சமூக கட்டமைப்புக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஹிந்து சமூக கட்டமைப்பை உடைக்கும் வகையில் எங்களது தீா்ப்பு இருக்க விரும்பவில்லை. இந்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை மிகுந்த கவனத்துடன் கையாள்கிறோம்.

எனவே, இந்த விவகாரத்துக்கு தீா்வு வேண்டுமெனில் உச்சநீதிமன்ற மத்தியஸ்தம் மையத்தை அணுகுமாறு மனுதாரா்களுக்கு அறிவுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0