டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை: ஏப்.1 முதல் புதிய விதிமுறைகள் அமல்: ரிசா்வ் வங்கி

Sep 26, 2025 - 00:30
 0
டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை:
ஏப்.1 முதல் புதிய விதிமுறைகள் அமல்: ரிசா்வ் வங்கி

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய கூடுதல் அத்தாட்சிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை அறிவித்தது.

அடுத்த ஆண்டு ஏப்.1-ஆம் தேதிமுதல், அந்த விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய இரு விதமான அத்தாட்சிகளை சமா்ப்பிக்கும் நடைமுறை வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

அதேவேளையில், பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறையை வங்கிகள் உள்ளிட்ட நிதி சேவை நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில், ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஏப்.1 முதல் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய குறுஞ்செய்தி மூலம் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வோ்ட்), கடவுச்சொற்றொடா், கைவிரல் ரேகை அல்லது வேறு எந்தவொரு பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்டவற்றை அத்தாட்சியாகப் பயன்படுத்தலாம். பயனருக்கு தெரிந்த, பயனா் பயன்படுத்தும் விஷயம் மூலம் அவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான அத்தாட்சியைப் பெறலாம்.

அதிக சிக்கல் கொண்ட பணப் பரிவா்த்தனைகள் குறித்து தெரியப்படுத்தவும், உறுதி செய்யவும் ‘டிஜிலாக்கா்’ தளத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு ஆட்சேபமோ, தயக்கமோ இல்லாமல் நிதி சேவை நிறுவனங்கள் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0